பொங்கல் பண்டிகை வந்தாச்சு. கிராமங்கள் போல் நகரங்களில் வாசலில் மண்பானையில் எல்லாம் பொங்கல் வைக்க வசதியில்லை. அதனால், நகரத்து பொங்கல் அனைத்தும் குக்கரில் தான் செய்யப்படுகிறது. அப்படி நீங்களும் குக்கரில் தான் பொங்கல் செய்வீர்கள் என்றால் இந்த வருடம் ஐயங்கார் ஸ்டைலில் சர்க்கரை பொங்கல் வைத்து பாருங்களேன். இதன் சுவை அமிர்தம் போல் இருக்கும். வாருங்கள், இப்போது ஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் எப்படி செய்வதென்று தெரிந்த கொள்வோம்…

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி - 1/2 கப்
  • பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
  • கொதிக்க வைத்த பால் - 1 கப்
  • தண்ணீர் - 1 1/2 கப்
  • வெல்லம் - ஒரு கப் (பொடியாக தட்டியது)
  • தண்ணீர் - 1/2 கப் (வெல்லத்தை பாகு காய்ச்ச)
  • நெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி - சிறிது
  • ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
  • பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை

செய்முறை:

  • முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி அது சூடானதும், பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • பின் அத்துடன் பச்சரிசியையும் சேர்த்து வறுத்து, இறக்கியதும், நீர் ஊற்றி நன்கு கழுவிக் கொள்ளவும்.
  • பின்னர் அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, கழுவிய அரிசி, பருப்புடன் பால் மற்றும் நீரை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரை மூடி, குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.
  • விசில் தானாக அடங்கியதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் அரிசி மற்றும் பருப்பை நன்கு மசித்து விடவும்.
  • இப்போது அதில் கொதிக்க வைத்த பால் சிறிது ஊற்றி நன்கு கிளறி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்துடன் நீரை ஊற்றி, பாகு தயாரித்துக் கொள்ளவும்.
  • தயாரித்த வெல்ல பாகை குக்கரில் உள்ள அரிசியில் வடிகட்டி ஊற்றி மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
  • பொங்கல் மிகவும் கெட்டியாக இருந்தால், அதனுடன் சூடான பால் அல்லது நீரை ஊற்றவும்.
  • அடிபிடிக்காமல் இருக்க ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி விடவும். பொங்கல் மிகவும் கெட்டியாக இல்லாமல், ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போதே, அடுப்பில் இருந்து குக்கரை இறக்கிவிடுங்கள்.
  • இப்போது ஒரு சிறிய வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரியைப் போட்டு வறுத்து, பொங்கலுடன் சேர்க்கவும்.
    *பொங்கல் மேல் சிறிது ஏலக்காய் பவுடர், பச்சை கற்பூரம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறினால், சுவையான ஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் தயார்.

IMAGE COURTESY: chitrasfoodbook